ஞாயிறு, 23 ஜனவரி, 2011
இணையம் வழி உரையாடலில் ஸ்கைப் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்று ஒரு புரட்சியை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்ததே.
அதேபோன்று இணையம் வழி உரையாடலில் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியே ooVoo ஊவு என்பது விண்டோஸ் மற்றும் மேக் இயங்கு தளங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஸ்கைப் போன்ற நிகழ் நேர இணையம் வழி உரையாடல் சேவையாகும்.
நேருக்கு நேர் முகம் பார்த்து நண்பர்கள். உறவினர்களோடு வீடியோ உரையாடலை மேற்கொள்ளக் கூடிய வசதியை இது வழங்குகின்றது.
இதன் மூலம் ஒரு கணனியிலிருந்து கணனிக்கும், கணினியிலிருந்து தொலை பேசிக்கும் தொடர்பை ஏற்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் ஒருவரோடு மாத்திரமின்றி ஆறு பேருடன் வீடியோ உரையாடலில் ஈடுபடக் கூடியதாயிருப்பதோடு, அதனை உரையாடலை ஒளிப்பதிவு செய்யக் கூடியதாயுமிருப்பது ஊவுவின் சிறப்பம்சமாகும். அத்தோடு ஊவுவில் வீடியோ மற்றும் ஓடியோவின் தரமும் சிறப்பாக உள்ளது.
ஊவு முதன் முதலில் 2007ஆம் ஆண்டு அறிமுகமானது. தற்போது உலகெங்கும் 14 மில்லியன் பேர் ஊவுவைப் பயன்படுத்துகிறார்கள். அத்தோடு பத்து ஸ்கைப் பயனர்களில் 8 பேர் ஊவுவை விரும்புவதாகவும் ஊவு நிறுவன இணைய தளம் சொல்கிறது.
ஊவு கணக்கைப் உருவாக்கிக் கொள்ளும் பயனர்களுக்கு இலவசமாக செய்திப் பரிமாறல், குரல் வழி மற்றும் வீடியோ உரையாடல் போன்றன கிடைக்கின்றன.
ஊவூவின் செயற்திறன் மற்றும் பயன்பாடு பற்றிய பயனர் கருத்துக்களை ஊவு நிறுவனத்தினருக்கு நிகழ் நேரத்திலேயே தெரிவிக்கவும் முடிகிறது.
ஊவு தரும் வசதிகள்
* Video Calling : வீடியோ அழைப்புகள் - ஆறு பேர் கொண்ட குழுவினரிடையே ஒரே நேரத்தில் வீடியோ உரையாடலை மேற்கொள்ளலாம்.
* Web Video Chatting : பிரவுஸரை அடிப்படையாகக் கொண்ட வீடியோ செட்டிங் செய்யும் வசதி.
இதன் மூலம் ஊவு பயன்படுத்தாதவர்களையும் மின்னஞ்சல் மூலமாகவோ பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்கள் மூலமாகவோ அழைப்பு விடுத்து ஊவு மென்பொருளை நிறுவாமலே வெப் பிரவுசரிலேயே வீடியோ உரையாடலை மேற்கொள்ளலாம்.
* Video messaging : ஐந்து நிமிட நேர நீளம் கொண்ட வீடியோ செய்தியினைப் பதிவு செய்து மின்னஞ்சலில் அனுப்பவோ அல்லது யூடியுப் தளத்தில் பதிப்பிக்கவோ முடியும்.
* Instant messaging : ஒன்றுக்கு மேற்பட்டோருடன் டெக்ஸ்ட் செட்டிங் எனும் தட்டச்சு செய்வதன் மூலம் உரையாட முடியும். வீடியோ உரையாடலில் இருக்கும் போதே டெக்ஸ்ட் செட் செய்யலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம்.
* Phone calls : உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணனியிலிருந்து தரைவழி தொலைபேசிக்கு இலவசமாக அழைப்புக்களை எடுக்க முடிவதோடு, ஒரு சிறிய கட்டணம் செலுத்துவதன் மூலம் செல்லிடத் தொலைபேசிகளுக்கும் அழைப்புகள் எடுக்கலாம்.
* Desktop sharing : வீடியோ அழைப்பில் இருக்கும் போதே பிற ஊவு பயனர்களுடன் உங்கள் கணனியின் டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள முடியும். அதன் மூலம் கணனியில் உங்கள் செயற்பாடுகளை உங்கள் நண்பரால் பார்வையிட முடியும்.
* File sharing : 25 MB அளவிலான பைல் ஒன்றை பிற ஊவு பயனர்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.
* Video call recording : வீடியோ உரையாடலைப் பதிவு செய்து பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
ஊவு சாதாரண கணனிப் பயனர்களுக்கு மட்டுமன்றி வணிக நிறுவனங்களுக்கும் உபயோகமான ஒரு சேவையாகும்.
வணிக நிறுவனங்களில் விற்பனை, விற்பனைக்குப் பிந்திய சேவைகள், பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவைகளுக்கு ஊவு வழங்கும் உடனடி செய்திப் பரிமாறல், டெஸ்க்டொப்பைப் பகிர்ந்துகொள்ளுதல், வீடியோ உரையாடலைப் பதிவு செய்தல், பைல்களைப் பரிமாறிக் கொள்ளல் போன்ற பல விதமான சேவைகளைப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினங்களைக் குறைக்க முடிவதோடு, நேரத்தையும் மீதப்படுத்தலாம்.
ஊவு மென்பொருளை http://www.oovoo.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்துகொள்ள முடியும். இணையம் வழி உரையாடலுக்கு உரு சாதாரண கணனி, வெப் கேமரா மற்றும் மைக் ஸ்பீகர் ஒன்றிணைந்த ஹெட் செட் என்பவற்றுடன் அதி வேக இணைய இணைப்பு என்பன அவசியம் என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்தான்.