நான் சொல்வது சரிதானே!! ?

இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து

புதன், 2 பிப்ரவரி, 2011


சொந்த நாய்களுக்குச்

சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!

ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே!

நிலம் மீட்டுத் தாருங்கள்…

பூனையொன்று காய்ச்சல் கண்டால்

மெர்சிடீஸ் கார் ஏற்றி

மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்

மரணத்தை தொட்டு

மனித குலம் நிற்கிறதே!

மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில்

செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல்

உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும்

உள்நோக்கோடு

ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும்

சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்

துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்

சிங்கள வெறிக் கூத்துக்களை

நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்

காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு

கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்

கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கி வைத்த உடல்களில்

எந்த உடல் தகப்பன் உடல் என்று

தேடி அடையாளம் தெரியாத

ஒரு பிணத்துக்கு அழுது தொலைக்கும்

பிள்ளைகளின் அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்

இனம் தின்னும் ராஜபக்சே மீதல்ல..

ஈழப்போர் முடிவதற்குள்

தலைவர்கள் ஆகத்துடிக்கும்

தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக் குறையாண்மை

செய்துவைத்த இறையாண்மைமீதுதான்!

குரங்குகள் கூடிக் கட்டமுடிந்த பாலத்தை

மனிதர்கள் கூடிக் கட்ட முடியாதா?

போரின் முடிவென்பது

இனத்தின் முடிவல்ல!

எந்த இரவுக்குள்ளும்

பகல் புதைக்கப்படுவதில்லை!

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை!

அழிந்தது போலிருக்கும் அருகம்புல்

ஆனால் கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே சிந்திய துளிகள்

சிவப்பு விதைகள்

ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
http://file1.hpage.com/archive/graphics/en/Love/rose.gif
பீரங்கி ஓசையில் தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்…    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக